பாவங்களைக் காட்டும் கண்ணாடி வேத புத்தகமே

(ஹசன் - கிராஜிஸ்) 

நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் எங்களது இஸ்லாம் மோல்டோக்களுடைய மாந்த்ரீகங்களை தன்னுள் கொண்டது. என்னுடைய பெயர் ஹசன். நான் மத்திய ஆசியாவிலிருக்கும் கிர்ஜிஸ் இனத்தைச் சேர்ந்தவன். 


சோவியத்தின் காலங்களிலிருந்தே நான் மலைக்கிராமத்திலிருந்து தலைநகரத்திற்கு வந்திருந்தேன். அங்கு நான் என்னுடைய பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொண்டேன். ஆனால் என்னுடைய இறுதிப் பரீட்சைகளில் தேறவில்லை. ஆகவே, நான் ஒரு கட்டடம் கட்டும் இடத்தில் பளுதூக்கும் இயந்திரத்தை இயக்குபவனாக வேலைக்குச் சேர்ந்தேன். 

ஒரு நாள் என்னுடைய வேலையில் நான் செய்த ஒரு பிழையின் காரணமாக ஒரு தொழிலாளி இறந்துபோனான். அதன் காரணமாக நான் சிறையில் அடைக்கப்பட்டேன். ஆனால் நான் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதுண்டு. இந்த சம்பவங்களின் காரணமாக நான் இறைவனைப் பற்றி அதிகம் சிந்தித்தேன். 

ஆரம்பத்தில் நான் குரானை வாசிக்க ஆசைப்பட்டேன். அதன்படி வாசித்தும் வந்தேன். ஆயினும் ஒருநாள் ஒரு ரஷ்யனும் கிறிஸ்தவனுமான ஒரு சக கைதியின் மூலமாக வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கினேன். அந்தப் புத்தகம் என்னுடைய பாவங்களைக் காட்டும் கண்ணாடியாக இருந்தது. நான் இழந்து போனவன் என்பதை நான் நன்கு புரிந்துகொண்டேன். 

என்னுடைய ரஷ்ய நண்பன் மூலமாக நான் கிர்ஜிஸ் கிறிஸ்தவர்களைச் சந்தித்தேன். கிறிஸ்துவின் பரிகார பலிமரணம் என்னுடைய பாவங்களைவிடப் பெரியது என்றும் அவர் என்னை விடுவிக்க முடியும் என்றும் அவர்கள் எனக்கு விளக்கிச் சொன்னார்கள். அதை நான் விசுவாசிக்க முயற்சித்தபோதிலும், என்னுடைய மாந்திரீக, பிசாசுகளுடன் தொடர்புடைய விசுவாசத்திலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. 

ஒரு நாள் நான் பகல்பொழுதில் நடைபெற்ற தீய ஆவிகளைக் குறித்த ஒரு கிறிஸ்தவ கருத்தரங்கத்தில் கலந்துகொண்டேன். தீய ஆவிகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய விசுவாசம் எவ்வளவு மோசமானது என்பதை நான் உணர்ந்துகொண்டபோது, அந்த மாந்த்ரீக நடவடிக்கைகள் யாவையும் விட்டுவிட்டு என்னை முழுவதுமாக கிறிஸ்துவிடம் ஒப்படைத்தேன். 

அன்றிலிருந்து பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டேன். இன்று கிறிஸ்து என்னுடைய வாழ்வை எவ்வாறு விடுவித்தார் என்று கிர்ஜிஸ் இன மக்களுக்கு சாட்சியாக நான் அறிவித்து வருகிறேன்.