ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை நேரடியாக சுட்டிக்காட்டி மரணித்துவிட்டார் என்று காட்டும் திருக்குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.
” மரியமின் மகன் ஈஸாவே, அல்லாஹ்வைத் தவிர என்னையும் எனது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் நீர் கூறினீரா என்று அல்லாஹ் கேட்பான். அவர் கூறுவார். நீ தூய்மையானவன், எனக்குத் தகாததை நான். கூறியதில்லை.
அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை நீயே நன்கு அறிந்தவனாவாய் என்று கூறுவார். (மேலும்) நீ எனக்கு கட்டளை இட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களோடு இருந்த காலம் அவரை அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால், நீ என்னை மரணிக்க செய்த பின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிக்கும் சாட்சியாளனாக இருந்தாய்.” (திருக்குர்ஆன் 5:117,118)
இந்த வசனத்தைப் படித்து சிந்தித்துப் பாருங்கள். நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ் ஈசா(அலை) அவர்களிடம் அவரையும், அவரது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளும்படி மனிதர்களுக்கு கூறினீரா எனக் கேட்பான் என்றும், அவர் பதிலளிக்கையில் அவ்வாறு நான் கூறவில்லை என்றும் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்றே கூறினேன் என்றும் அவர்கள் மத்தியில் வழ்ந்திருந்தவரையில் தம்மையும், தனது தாயாரையும் கடவுள்களாக தமது மக்கள் வணங்கவில்லை என்றும் அதற்க்கு அவரே சாட்சியாளன் என்றும், அவரை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நம்பிக்கைக்கு என்ன மாற்றம் ஏற்பட்டதென அவர் அறியமாட்டாரென்றும், அவர்களை கவனிப்பவனும் அவர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பவனும் இறைவனே என்று அவர் பதில் சொல்லுவார் என்றும் இந்த இறைவசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாம், தெரிந்து கொள்வது யாதெனின், ஈசா நபி மனிதர்கள் மத்தியில் இருந்தவரை, அவரை மக்கள் கடவுளாகவோ, கடவுளின் குமாரனாகவோ வணங்கவில்லை என்றும், மக்கள் ஈசா நபியை கடவுளாக வணங்கியது, அவர்களின் மரணத்திற்கு பிறகே என்றும் மிகத் தெளிவாக தெரிகிறது. ஆகவே, ஈசா நபியின் மரணம் முன்பும், மனிதர்கள் அவரை கடவுளாக வணங்க ஆரம்பித்தது பின்பும் என மேற்படி இறைவசனம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
இப்னுமரியம், அதாவது மரியமின் மகன் ஈசா வருவார் என்ற சில நபி மொழியின்படி, சென்ற காலத்தில் யூதர்களுக்காக அனுப்பப்பட்ட ஈசா நபி மரணிக்காமல் வானத்தில் வாழ்ந்து வருகிறார் என்ற தவறான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஆலிம்கள் நீண்ட காலமாக போதித்து வந்ததன் காரணமாக குரானுக்கு எதிரான இந்த நம்பிக்கையை உம்மத்தே முஹம்மதியாவாகிய முஸ்லிம்களின் உள்ளத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. அந்த நம்பிக்கை பரிசுத்த குரானுக்கு எதிரானது என நிரூபிக்கும் பொறுப்பில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இருக்கிறது எனக் கூறிக் கொள்கிறேன். திருக்குரானுக்கு விளக்கம் கூறுவதற்கு முதல் தகுதி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். மேற்படி இறை வசனத்திற்கு விளக்கம் கூறுவதைப் போன்று ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தங்களுக்கு மறுமையில் நடக்கும் ஒரு சம்பவத்தை கூறுகிறார்கள். ஹஸ்ரத் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், மேற்க்படி இறை வசனத்திற்கு விளக்கமாக இந்த ஹதீஸை தங்கள் கிரந்தத்தில் எழுதியிருக்கிறார்கள்.
ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதரிக்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர். என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி) கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள் மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்.” ( புகாரி கிதாபுத் தப்ஸீர்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான ‘வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு ‘நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.’ என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது. நீங்களே நன்கு சிந்தனை செய்துபாருங்கள்.
நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய ‘நீ என்னை மரணிக்க செய்தபின்’ என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும் என்று முஸ்லிம் சகோதரர்களுக்கு நினைவுறுத்துகிறேன்.
இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் லட்சக்கணக்கான கிருஸ்தவர்கள் முஸ்லிம்கலாகிவிட்டார்கள். அவர்களிடம் உள்ள பழைய நம்பிக்கையாகிய ஈசா நபி வானத்தில் உயிரோடு பூத உடலுடன் இருக்கிறார் என்ற கொள்கை, இஸ்லாம் மார்க்கத்தில் படிப்படியாக புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டது. அதற்க்கு காரணம் முல்லாக்களான ஆலிம்களே. இறுதி காலத்தில் மரியமின் மகன் ஈசா வருவார் என்று சில ஹதீதுகளை காட்டி திருக்குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமான பொருள் கொடுத்து முஸ்லிம்கள் அனைவரையும் திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அதைத்தான் மறுமையில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) என் இறைவனே எனது சமுதாயத்தினர் இந்த குரானை முதுகுக்கு பின்னால் எறிந்து விட்டனர் என்று கூறுவார், என்ற வசனம் தெளிவாக தெரிவிக்கிறது.
மேலும் விபரங்களுக்கு இங்கே
க்ளிக்